December 12, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (பிராசதம் - படையல்)

இறைவனுக்கு பக்தியுடன் பூஜை செய்கிறோம். சரி. ஆனால் கூடவே படையல் படைக்கிறோம். சாமி என்ன அதை சாப்பிடவா போகிறது? இறைத் தத்துவத்துக்கு பசி தாகம் ஆட்கொள்ளுமா? என்ற கேள்வி பலருக்கு உண்டு. "சாமி மட்டும் நிஜமாகவே வந்து எல்லாத்தையும் சாப்பிட்டா, அவனவன் படைக்கறதையே நிறுத்திடுவான். அப்புறம் நாம என்னத்த சாப்பிடறது? சாமி பேரை சொல்லிகிட்டு நாம சாப்பிடத்தான் எல்லாம்" என்ற கிண்டல் பேச்சுக்களும் ஏராளம் கேட்டிருக்கிறோம்.

சாமிதான் சாப்பிடுவதில்லையே பின் ஏன் படைக்கிறோம்? அதாவது நான் செய்யும் அனைத்தையும் இறைவனே உனக்கு அர்ப்பணம் என்று அர்ப்பணிக்கும் மனப்பாங்கு வளர்வதற்கே இதையெல்லாம் செய்வது. உண்மையில் ஆன்மீக நாட்டம் கொண்ட அன்பர்கள், தம் செயல், செயலின் பலன், எண்ணம் முதலிவையெல்லாவற்றை அர்ப்பணிக்க வேண்டும். அதையெல்லாம் செய்ய நம்மால் பல நேரம் முடியாமற் போகிறது. மாயை ஆட்கொள்கிறது. குறைந்தபட்சம் உணவு, உடை போன்ற எளிமையான விடயங்களிலிருந்து இறையை நாடலாமெ!ஆகவே இறைவனே இந்த உணவை இந்த எளியேன் உனக்கு அர்பணிக்கிறேன் என்ற தொண்டனின் மனத்துடன் படைத்து, அதையே உணவாக, பிரசாதமாக உண்கிறான் பக்தன்.

நிவேதனைத்தின் மஹிமையை நாம் மறந்து விட்டிருக்கிறோம். நிவேதனம் சாமி சாப்பிடுவதற்காக அல்ல. "இவை எல்லாம் எனக்கு கொடுத்தருளினாயே இறைவா உனக்கு நன்றி" என்று அறிவிப்பதே நிவேதனம். இன்றைக்கும் கூட பல க்ருத்துவர்களின் வீடுகளில் இயேசுவிற்கு நன்றி செலுத்திவிட்டு உணவை உண்கிறார்கள். பல ஆசிரமங்களிலும், ஆன்மீக இடங்களிலும், மானசீகமாக உணவை அற்பணித்துவிட்டு உணவை உண்கிறார்கள். இறைவா இந்த உணவை நீ வழங்கினாய், இதை உனக்கு அற்பணிக்கிறேன், நன்றி செலுத்துகிறேன் என இரண்டு வினாடி மனதால் நினைத்தாலும் போதுமானது.

சிறு விஷயம் தானே! இன்று முதற்கொண்டு நாமும் கடைபிடித்தால் என்ன!?

மற்றபடி இறைவன் நிஜமாகவே நாம் படைக்கும் உணவை உண்பாரா என்றால், கண்ணப்பநாயனார் போன்ற பக்திபூர்வமான ஆன்மாக்களுக்கு இறையின் அருள் தங்கு தடையின்றி, மனிதன் வகுத்திருக்கும் பல சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடந்தும் பொழியும்.

No comments:

Post a Comment